vendredi 24 août 2007

கவிதைகளைக் கடன் தந்து காற்றோடு கலந்துவிட்ட கதிரேசர்
(இளவாலை விஜயேந்திரன்)

ஆஹோ, வாரும பிள்ளாய். இற்றைக்கு சற்றேறக் குறைய இருபது வருடங்கள் முன்னான ஒரு குட்டிக்கதை சொல்வேன். கேளும். அது ஒரு பின்னேரம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வசந்தகால பின்னேரங்களில் ஒன்று. தெல்லிப்பழை என்று கூறப்பட்டாலும்அம்பனைப் பெருவயல் வெளிகளின் ஓரத்தே அமைந்திருந்தது அந்தக் கல்லூரி. அதனைப் பட்டிக்காடு என்று பரிகசிப்போரும் அக்காலத்தில் இருந்தனர். கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு என்று சகல துறைகளிலும் பட்டணத்திற்குச் சவால்விட்ட ஒரு பட்டிக்காடு தான் கேளும்.
அக் காலம் கிறிக்கெட் என ஆங்கிலத்திலும் துடுப்பாட்டம் எனத் தமிழ்பிரியர்களாலும் அழைக்கப்பட்ட ஓர் ஆட்டத்தின் பயிற்சி நிகழ்ந்துகொண்டிருந்தது அந்த மாலையில். பயின்றோர் பாதி இளைஞர்கள். பாதி சிறுவர்கள். அல்லது பதின்பருவத்தினர் என்றே கூறலாம். படிப்பில் சாதிக்காவிடில் விளையாட்டிலாவது சாதித்துத் தமது மனங்கவர் இளைஞிகளின் கவனம் ஈர்க்கும் எண்ணம். மனம் நிறைந்த பருவம். பயிற்றுவித்தவர் பந்தை உயர்த்தி அடிக்காமல், நிலமட்டத்திற்குச் சமாந்தரமாக அடிக்குமாறு கூறினார். தயாளன்தான் அடித்தவன். பந்து உயர்ந்துவிட்டது. பயிற்றுவித்தவர் பேசினார். 'டேய், நிலத்துக்குப் pயசயடடநட ஆயெல்லோ அடிக்கச்சொன்னனான்." தயாளன் வஞ்சகமில்லாமல் சொன்னான். 'ஓமண்ணை, பரவலாத்தான் அடிச்சனான். அது உயர்ந்து போச்சு." சமாந்தரம். பரவலான குட்டிக்கதை இது. பரலல் என்ற ஆங்கிலச்சொல்லுக்கும் பரவல் என்ற தமிழ்ச்சொல்லுக்கும், உச்சரிப்பில் ஒரு சின்ன வித்தியாசம்தான். எனவே தயாளன் பேச்சு வாங்காமல் தப்பியதோடு அது ஒரு நகைச்சுவையாகவும் போயிற்று. தமிழில் 'ல"கர, 'ள"கர பேதங்களில் தடுமாறுவது வழக்கம்தான். தயாளன் மொழிகடந்து லகர, ளகர பேதங்களில் தடுமாறிவிட்டான் . அவ்வளவுதான்.
ஒரேமாதிரியான, அல்லது ஓரளவு ஒற்றுமையான உச்சரிப்பு உடைய எழுத்துக்களில் பேதம் கண்டுபிடிப்பது சிலருக்குச் சிரமமாக இருப்பதை அவதானித்திருக்கிறேன். உண்மையில், தமிழின் லகர, ளகர, ழகர பேதங்கள் மனதில் படமாகப் படிந்துவிடுவன. ரகர, றகர பேதங்களும் இப்படியே. பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் ஒவ்வொருவரும் தமது மனதினுள் வைத்திருக்கும் இந்தப் படத்தில் எவ்வாறு லகர, ளகர, ழகரங்கள் பதிந்திருக்கிறது என்பதுதான். நல்லவேளையாக எனதுநிலை குறைந்தபட்சம் இந்தவிடயத்தில் கவலைக்கிடமில்லை. கசடறக் கற்பதுதான், மொழியின் இந்த நுணுக்கங்களை மறவாது படமாக்க உதவக்கூடியது. தமிழில் எத்தனையோ அற்குதங்கள் இருந்தாலும், இது சிலருக்கு வில்லன மாதிரி. எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பரொருவர் (மிகப் பிரபலமானவர்) பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய படைப்புடன் ஒரு கடிதம் வைத்திருந்தார். அதில் 'எளுத்துப் பிளைகள் இருந்தால் திருத்திவிடுங்கள்" என்று இருந்தது. அவரது படைப்புகள் பிரசுரமாகாத பத்திரிகைகள் இல்லை. அவற்றின் ஒப்புநோக்குனர்களுக்கும், அச்சுக் கோப்பவர்களுக்கும் இவரது படைப்புகள் பீதியை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எழுத்தாளர் தனது மனதில் அந்த ளகரப் படத்தை நீண்டகாலமாகவே அகற்றவில்லை என்பது அண்மையிலும் நான் அறிந்தது.
எனது வகுப்பில் படித்தவர்களில் பெரும்பாலோர் லகர, ளகரப் பிரச்சனைகளில் குறைவாகவே மாட்டுப்படுவர. என்று நான் உறுதியாக நம்புகிறேன். காரணம் அவர்களுக்குப் படம் பிடித்துக் கொடுத்தவர், கதிரேசர். வாசிக்கும்போது 'உதிலை என்ன இருக்கு ழானாவோ, ளானாவோ" என்று வாத்தியார் கேட்கும்போது, அவரது குறும்பிரம்பால் வாயைப்பயம் வாங்க நேரிடும், என்று மாணவர்கள் தமது படத்தைத் திருப்பிப் பிடித்திருப்பர் என்பது நம்பிக்கை. கதிரேசர் என்று மாணவர்களால் அழைக்கப்படும் ஆசிரியர் திரு செ.கதிரேசர்பிள்ளையின் சிறப்புகளில் அல்லது அவரது இயல்புகளில் ஒன்று, அவரது நீலஃபைலும், அதற்கே அளவாக இவட்டப்பட்ட பிரம்பும்தான் அவர் இரண்டையும் அளவறிந்துதான் பாவித்தவர். அவரது பிரம்பிடம் மாணவர்களுக்குப் பக்தி அதிகம். அது வெளியே தெரியாத நாட்கள் மாணவர்களுக்கு நிம்மதியான நாட்கள்தான். அது கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இருக்கும் ஆமி காம்ப் மாதிரி. எப்போது ஆமி வெளியில்வரும் என்று தெரியாது. கவனமாக இருத்தல் நல்லது. கதிரேசர்பிள்ளை அவர்கள் தனது வகுப்பில் தமிழ்தான் படிப்பித்தவர் என்றாலும் அது ஒரு அசாதரண வகுப்பறை என்றே கூறலாம். தமிழை அடிப்படையாகக் கொண்ட பல விடயங்கள் அந்த வகுப்பறைக்குள் வரும், போகும். ஒருநாள் நாடகம் (பாடத்திட்டத்தில் இல்லாவிட்டாலும்) வரும். இன்னொருநாள் அறியாத ஒரு கவிதையும் அதன் இரசனையும் வரும். இத்தனைக்கும் வகுப்பைக் கட்டியாளக்கூடிய ஓர் அசாதரண ஆளுமையுடைய குரல் அவருக்கு இருந்தது ஒரு அனுகூலம் எனலாம். அவருடைய வகுப்பில் 'சிலபஸ்" முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டெல்லாம் ஒருபோதும் வராது. அவர் அந்த பஸ்ஸையும் முடித்துவிட்டு வேறு பஸ்களிலும் மாணவர்களை ஏற்றித்திரிவார். இவை, இன்றைக்கும் அவரது மாணவர்கள் அவரை மறக்கமுடியாமல் இருக்க முக்கிய காரணங்கள் சில. அவரது வகுப்பறை ஒரு அமைதியான மண்டபம்போல் சில சமயங்களில் தோன்றும். சில சமயங்களில் அரசு கொலுவீற்றிருக்கும் மிடுக்கோடு தோன்றும். பிறிதோர் சந்தர்ப்பத்தில் காதல் ரசம் சொட்டும் சோலை போன்று தோன்றும். இந்த இரசாயண பௌதிக மாற்றங்களுக்கு அவரது நடிப்பாற்றலும், வகுப்பில் பல்வேறுபட்ட ரசனைகளைக் குவிக்கும் ஆளுமையும் காரணமாக இருந்தன. அவரது வகுப்பறைக்குள்ளால் புறப்பட்டு இன்று உலகின் பல பாகங்களிலும் தமிழ் வளர்க்கும் பலரை நான் அறிவேன். எந்தச் சந்தேகமும் இல்லாமல் அவர்களிடம் கதிரேசரின் ஆளுமை படிந்திருக்கிறது என அடித்துச் சொல்வேன். கண்டிப்பும், கண்டிப்பிற்குப் பின் ஒளிந்திருக்கும் கனிவும் அவரது இன்னொரு இயல்பு. ஒரு நாள் ஒரு மாணவன் கண்டிக்கப்பட்டால், அடுத்தநாள் அவனது பயம் வேறுவிதமாகக் குறைக்கப்படும். சகல மாணவர்கள் பற்றியும் அவர் சரியாகக் கணித்திருந்தார். யார் குழப்படி செய்வார்கள் எனத் தெரிந்து அவர்கள்மேல், தனது கண்ணாடியின் கீழான பார்வையை அனுப்பி ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிவிடுவார். பிறகு குழப்படியாவது. ஒவ்வொரு மாணவரையும், அவரது திறமையை அடையாளம் காட்டிப் பாராட்டுவதோடு மாத்திரம் அவர் நின்றுவிடுவதில்லை. வேறு வழிகளில் பாராட்டுத் தேடிவரும்படியும் செய்வார். ஒரு தடவை எனது கட்டுரைக் கொப்பியை வேறு வகுப்பு மாணவிகள் (அப்போது எனக்குப் புல்லரித்த விடயம்) இரவல் கேட்டபோதுதான் அவர் கட்டுரைகளைத் திருத்துவதற்காக மாத்திரம் கொப்பிகளைக் கொண்டு செல்வதில்லை எனத் புரிந்தது. எனது கட்டுரை ஒன்றை அவர்களின் வகுப்பில் வாசித்துக் காட்டி, இப்படித்தான் கட்டுரை எழுதவேண்டும் என்றாராம் அவர். ஆனால் ஒருபோதும் எனது கவிதையை இப்படித்தான் எழுதவேண்டும் என யாருக்கும் முன்னுதாரணமாகக் கொண்டு சென்று காட்டியதில்லை. ஏனெனில், ஏதோ ஒருவித அச்சம் காரணமாக அவரிடம் நான் எனது காதல் ரசம் சொட்டிய இளவயதுக் கவிதைகளைக் காட்டியதில்லை. அவரது நாடகங்கள் பல தொடர்ச்சியாக அகில இலங்கையிலும் முதல் இடத்தைப் பெற்றன. இதற்கக் காரணம் இருக்கிறது. அவரது நாடகப் பிரதிகள் இதிகாசங்களில், முக்கியமாக இராமாயணத்தில் மக்களால் அதிகம் அறியப்படாத பகுதிகளைச் சுவையாக நாடகமாக்கி, அரங்கில் தருபவை. அவரது நெறியாள்கையில் நானும் (பெண் வேடமுமிட்டு) நடித்திருக்கிறேன் என்பது பெருமை. அவரது நாடகங்களில் நடித்ததன் மூலமே அந்தப் பாடசாலைக் காலங்களில் தமது புகழ்க்கொடியை நாட்டியவர்கள் பலர் உள்ளனர். அப்படிப் புகழ்க் கொடி நாட்டாவிட்டாலும், பல கொடிகளின் நிழலில் நான் நின்றிருக்கிறேன் என்பது எனக்குத் திருப்தி தருவது.
அவரிடம் கல்வி கற்ற மாணவர்களிற் பலர் அவரது கவிதைகளை வாசித்ததில்லை. முக்கிய காரணம் வகுப்பறைகளில் ஒருபோதும் தனக்கு அவர் இலவச விளம்பரம் தேடாதது. இன்னொன்று இப்போதைய பல கவிஞர் பெருமான்களைப் போல அவரிடம் தற்பெருமையோ, கவிதையால் பிழைக்கும் புத்தியோ இல்லாதது. அவர் எவ்வளவு தூரம் கவிதைகளை எழுதினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் நிறையவே எழுதியிருக்கவேண்டும் என்பது மட்டும் எனது விருப்பம். அவரது 'மரங்கள் நாட்டுவோம்" என்ற இசைப் பாடலைக் கல்லூரியின் மாணவ மாணவியரின் குரலில் கேட்ட யாரும் அவரது கவியாற்றல் பற்றிச் சந்தேகம் கொள்ளார். அவர் தனது கவிதை ஆற்றலைக்கூடச் சரியாக நெறிப்படுத்தாமல், மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்திச் செயற்பட ஒருவராயும் இருந்திருக்கலாம். ஆனால் அவரது மொழிமீதான ஆளுமை இன்றை எந்தக் கவிஞருக்கும் இருக்குமா என்று தெரியவில்லை. அந்த வகையில் அவர் பல கவிதைகளை எழுதாமல் இருந்தது எங்கள் துரதிர்~;டம்தான். பிற்காலத்தில் அவரது பார்வை மங்கலாகிப், பிறகு ஒரேயடியாகப் போய்விட்டது. இந்த அவசர உலகில் நிகழும் அனர்த்தங்கள் பலவற்றைப் பார்க்க வேண்டாம் என இயற்கை அந்த வாய்ப்பை அவருக்கு அளித்ததோ என்னவோ, நம்பிக்கைகள் தகர்ந்துகொள்ள அடுத்த நாளைப் பற்றிய நிச்சயமின்மை மனதை உரத்து அரிக்க இன்னொரு தேசத்தில் நான் வாழ்க்கiயில் அவரது மரணம் பற்றிய செய்தி வந்தது. இன்றுவரை மரணத்திற்குத் தப்பிய மானுடர் இல்லை. அவர் விதிவிலக்காக இருக்கவில்லை. இளமையின் நாட்களை இரைமீட்கையில் மனதுக்குள் புகைபோல எழுந்துவரும் துயரம் எனது மனதை மூடிவிட்டது. கண்களையும் கூட, வாயையும் கூட, என்னால் எதுவும் பேச முடியவில்லை. எனது மொழியின் மீதான் ஆளுமையிலேயே பெரும்பாலும் உணர்கிறவன் நான். மொழி என்கிற ஞானப் பாலை ஊற்றிய தாயை நான் இழந்தேன். துருவங்கள் சந்திக்கிற மாதிரித்தான் ஈழத்தமிழர்களின் வாழ்வும் நட்பும் ஆகிவிட்டது. எவரை எப்போது காண்போம் என்பது தெரியாது. எவரையாவது காண்போமா என்பதும் தெரியாது. ஒன்று நிச்சயம், பலரது தமிழறிவுக்குக் காரணமான கதிரேசரை இனிக் காணமாட்டோம். அவரைப் போன்ற இன்னொருவரையும் வாழ்நாளில் காணமுடியாது போகலாம்.

1 commentaire:

Anonyme a dit…

viyajendran article published in 1993. it mus be noted.