vendredi 24 août 2007

தூங்காத கண்கள்...

தொலைபேசி வாழ்க்கை என்னுடன் இரண்டறக்கலந்து நீண்டகாலமாகிவிட்டது. இப்போ அது இல்லாமல் நான் இல்லை. என்னால் முடியாது. ஆனாலும் வீட்டில் பலவேலைகளை நாங்களே செய்து முடிக்கவேண்டும். அப்படியொரு தீவிரமான வேiலைப்பொழுது ஒன்றில்தான் அவர் போன் செய்தார்.
வணக்கம்.வணக்கம். நான் ஒரு மகாஜனாவின் பழையமாணவர்.என்ற மறுமுனைக் குரலைக்கேட்டதும்; உசாராகிய என்னை அவரது சுய அறிமுகம் மேலும் உசாராக்கியது.
என்ன வேலை. சரி. நாளைக்கும் தொடரலாம் தானே!. மனசு இரங்க தொடர்ந்தேன்.
என்னுடைய பெயர் மகாதேவன். இடம் குரும்பசிட்டி. 63 வாக்கில் மகாஜனாவில் பயின்றேன். மகாஜனா பழையமாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை உபதலைவராக இருக்கிறேன். இன்றுதான் பிரான்சுக்கு வந்தேன். இரண்டுநாட்கள் மட்டும் பிரான்சில் தங்கமுடியும் என்றார்.
அறுபத்திமூன்று காலப்பகுதிஎன்றால், எனது வாய்க்குள் அரையும்குறையுமாக விரல் ஊசலாடிக்கொண்டிருந்த காலம். சின்னக் கழிசானோடு பள்ளிக்கூடமே நினைக்காத பருவம். சரி போகட்டும்.
உங்கட காலத்தில நான் அங்க யில்லை. அதிபர் ஜெயரத்தினம் பாடசாலையை விட்டு விலகியபோதுதான் நான் வந்தேன் என்றேன்.நீங்கள் குரும்பசிட்டி என்றா..ல்........., என்னுடன் குரும்பசிட்டி நண்பர்கள் சிலர் படித்தார்கள் ...சிலவேளை உங்களுக்கு என்று நான் இழுக்க யார்... யார் என்ற என்றார் ஆர்வம் பொங்க.
என் நினைவில் வந்தவர்கள்... வாமதேவன், மனோகரன். இன்னனுமாருவர் மகேஸ்வரன்.மகேஸ்வரனோடு இன்னுமொரு மறக்கமுடியாத சம்பவமும் மீண்டெழுந்தது. மகேஸ்வரனுக்கு ஒரு அண்ணை இருந்தவர். பெயர் நினைவில்லை. நல்ல மனிதர். கெட்டிக்காரர். அவருக்கு யாரோ வேண்டத்தகாவர்கள் முகத்தில் அசிட் அடித்தவர்கள். என்று நான் சொல்லச் சொல்ல அவர் ம் கொட்டிக்கொண்டிருந்தார்.அந்த அசிட் அடித்த சம்பவம் எனக்குள் மறக்கமுடியாத பதிவு. இப்போது நினைத்தாலும் மனசு ஜில்லிடுகிறது என்று நான் வேதனையைக்கொட்ட ம் கொட்டிக்கொண்டிருந்த திரு. மகாதேவன் அந்த அண்ணன் நான் தான் என்றார்.
நான் விறைத்துப்போனேன். எனக்கு வார்த்தைகள் வரவில்லை. சில கணங்கள் தடுமாறினேன்.ஒருமாதிரி என்னைச் சுதாகரித்துக்கொண்டு தொடர்ந்தேன்.இளவயதில் என்னுள் பதிந்த கோரம் இன்னும் ஆழமாக இன்மொரு நிகழ்ச்சியும் காரணம்.ஏறக்குறைய பத்து வருடங்கள் இருக்கலாம். பிரான்ஸிலருந்து வானொலி நிகழ்ச்சிஒன்று ஒலிபரப்பாகின்றது. அதில்; கனடா வானொலி நிகழச்சியொன்று. இதில் கலந்து கொண்ட கட்டுவன் நேயர் ஒருவர் - பெயர் நினைவில்லை - உங்களுக்கு நடந்த அந்தச்ம்பவத்தை நீனைவு மீட்டிக்கொண்டிருந்தார். எனக்கு மகேஸ்வரன், பள்ளிக்ககூடவாழ்க்கை எல்லாமே மனத்திரையில் எழுந்துநின்றாடின.
விபத்துக்கள் எதிர்பாராமல் வருவை. ஆனால் இது விபத்தல்ல. பழிவாங்கவேண்டும் என்ற அரக்ககுணம்.சல்புரிக் அமிலம், ஐதரோக்குளோரிக் அமிலம் பற்றி நாங்கள் விழி பிதுங்க பிதுங்க விஞ்ஞான பாடத்திற்தில் கற்றுக்கொண்டிருந்தோம். இந்த அசிட்டைப்போய் மனிதரின் முகத்தில் வீசி அடித்தால்....! நினைக்கவே எங்களுக்க குரல்வளை நடுங்கியது. மகாதேவன் அண்ணருக்கு வீசிய அசிட் பக்கத்தில் நின்ற மரஞ்செடி கொடிகளையும் எரித்துப் பொசுக்;கியதாகவும்;, அவர் ஓட்டிவந்த ஸ்கூட்டர் கலர்மாறியமாதாகவும் பார்த்தவர்கள் சொல்லக்கேட்டு வெருண்டோம். மகேஸ்வரன் நீண்ட நாட்களாக பாடசாலைக்கு வரவில்லை. வைத்தியசாலையும் வீடுமாக மாறிமாறி அலைந்தததால் அவன் படிப்பும் தடைப்பட்டது.இதைநான் சொன்னபோது தொலைபேசியின் மறுமுனையில் அவர்குரல் தளுதளுத்ததை உணரமுடிந்தது.
நானும் உணர்ச்சிவசப்பட்டடேன்.
எங்களது தொலைபேசி இணைப்பு தவிர்க்கமுடியாமல் விட்டு விட்டுத் தொடர்ந்தது.திரு. மகாதேவன் தொடர்ந்தார்.பாடசாலைக்காலம் பற்றிய பசுமைகள் பலவற்றை இறக்கினார். தன்னுடைய மனைவியும் மகானாஜவில் தான் கல்விபயின்றவர் என்றும் தாங்கள் காதலித்தே கைப்பிடித்தோம் என்றும் சொன்னார்.
பிறகென்ன! பாடசாலைப் பசுமைபற்றி சொல்லவா வேண்டும்.!நான் ம் கொட்டிக்கொண்டிருநதேன்.தாங்கள் உயர்தரவகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோதுதான் மைதனத்திற்கு புல் பதித்;த கதையையும் சொன்னார். அதிபர் ஜெயரத்தினம்பற்றி கதைகள் பல பகிர்ந்தார்.
இரண்டு தினங்கள் மாறிமாறிக் கதைத்தும் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்ற ஏக்கம் என்னுள். பாரிஸிலிருந்து முந்நூறு கிலோ மீற்றர் தொலைவிலிருக்கிறேன். திரு. மகாதேவன் மறுநாளே ஜேர்மனி சென்று கொழும்பு திரும்பிவிட்டார். எனக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத வேதனை. திரும்ப திரும்ப அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.
கொழும்புவரை சுகமாக வந்து சேர்ந்ததாக சொன்னார். பயணம் மனதுக்கு இதமாக இருந்தது என்றார்.உங்களை நேரில் பார்க்கமுடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது என்றேன். எனக்கு வருத்தமில்லை என்றார். எனக்கு சீ என்ற போனது.
நின்று நிறுதிட்டமாகச்சொன்னார். தம்பி எனக்கு எல்லாம் ஒன்று தான். 1973ம் ஆண்டு யூலை 25ம் திகதி நடந்த அந்த அசிற் சம்பவத்தில் எனது இரண்டு கண்களும் பார்வையிழந்துவிட்டன...
ஐயோ என்று நெஞ்சுக்குள் குழறினேன்
மனைவியே எனக்கு கண்கள். முப்பது வருடங்கள். எவ்வளவற்றதை;தாங்கிவிட்டேன். நம்பிக்கையே வாழ்க்கை. என்ற போது அவரது குரலில் உறுதி தொனித்தது.உறுதிமிக்க மகாஜனன் ஒருவருடனான தொடர்பு தொற்றிக்கொண்டதில் நானும் பெருமைகொண்டேன்.நாம் படித்த பாடசாலை என்ற இழை எப்படி யெல்லாம் பற்றிப்படர்கிறது.மகாஜனத்தாயே உனக்கு எனது வாழ்த்து.
- நா. வரதன்.

Aucun commentaire: