vendredi 24 août 2007

கவிதைகளைக் கடன் தந்து காற்றோடு கலந்துவிட்ட கதிரேசர்
(இளவாலை விஜயேந்திரன்)

ஆஹோ, வாரும பிள்ளாய். இற்றைக்கு சற்றேறக் குறைய இருபது வருடங்கள் முன்னான ஒரு குட்டிக்கதை சொல்வேன். கேளும். அது ஒரு பின்னேரம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வசந்தகால பின்னேரங்களில் ஒன்று. தெல்லிப்பழை என்று கூறப்பட்டாலும்அம்பனைப் பெருவயல் வெளிகளின் ஓரத்தே அமைந்திருந்தது அந்தக் கல்லூரி. அதனைப் பட்டிக்காடு என்று பரிகசிப்போரும் அக்காலத்தில் இருந்தனர். கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு என்று சகல துறைகளிலும் பட்டணத்திற்குச் சவால்விட்ட ஒரு பட்டிக்காடு தான் கேளும்.
அக் காலம் கிறிக்கெட் என ஆங்கிலத்திலும் துடுப்பாட்டம் எனத் தமிழ்பிரியர்களாலும் அழைக்கப்பட்ட ஓர் ஆட்டத்தின் பயிற்சி நிகழ்ந்துகொண்டிருந்தது அந்த மாலையில். பயின்றோர் பாதி இளைஞர்கள். பாதி சிறுவர்கள். அல்லது பதின்பருவத்தினர் என்றே கூறலாம். படிப்பில் சாதிக்காவிடில் விளையாட்டிலாவது சாதித்துத் தமது மனங்கவர் இளைஞிகளின் கவனம் ஈர்க்கும் எண்ணம். மனம் நிறைந்த பருவம். பயிற்றுவித்தவர் பந்தை உயர்த்தி அடிக்காமல், நிலமட்டத்திற்குச் சமாந்தரமாக அடிக்குமாறு கூறினார். தயாளன்தான் அடித்தவன். பந்து உயர்ந்துவிட்டது. பயிற்றுவித்தவர் பேசினார். 'டேய், நிலத்துக்குப் pயசயடடநட ஆயெல்லோ அடிக்கச்சொன்னனான்." தயாளன் வஞ்சகமில்லாமல் சொன்னான். 'ஓமண்ணை, பரவலாத்தான் அடிச்சனான். அது உயர்ந்து போச்சு." சமாந்தரம். பரவலான குட்டிக்கதை இது. பரலல் என்ற ஆங்கிலச்சொல்லுக்கும் பரவல் என்ற தமிழ்ச்சொல்லுக்கும், உச்சரிப்பில் ஒரு சின்ன வித்தியாசம்தான். எனவே தயாளன் பேச்சு வாங்காமல் தப்பியதோடு அது ஒரு நகைச்சுவையாகவும் போயிற்று. தமிழில் 'ல"கர, 'ள"கர பேதங்களில் தடுமாறுவது வழக்கம்தான். தயாளன் மொழிகடந்து லகர, ளகர பேதங்களில் தடுமாறிவிட்டான் . அவ்வளவுதான்.
ஒரேமாதிரியான, அல்லது ஓரளவு ஒற்றுமையான உச்சரிப்பு உடைய எழுத்துக்களில் பேதம் கண்டுபிடிப்பது சிலருக்குச் சிரமமாக இருப்பதை அவதானித்திருக்கிறேன். உண்மையில், தமிழின் லகர, ளகர, ழகர பேதங்கள் மனதில் படமாகப் படிந்துவிடுவன. ரகர, றகர பேதங்களும் இப்படியே. பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் ஒவ்வொருவரும் தமது மனதினுள் வைத்திருக்கும் இந்தப் படத்தில் எவ்வாறு லகர, ளகர, ழகரங்கள் பதிந்திருக்கிறது என்பதுதான். நல்லவேளையாக எனதுநிலை குறைந்தபட்சம் இந்தவிடயத்தில் கவலைக்கிடமில்லை. கசடறக் கற்பதுதான், மொழியின் இந்த நுணுக்கங்களை மறவாது படமாக்க உதவக்கூடியது. தமிழில் எத்தனையோ அற்குதங்கள் இருந்தாலும், இது சிலருக்கு வில்லன மாதிரி. எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பரொருவர் (மிகப் பிரபலமானவர்) பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய படைப்புடன் ஒரு கடிதம் வைத்திருந்தார். அதில் 'எளுத்துப் பிளைகள் இருந்தால் திருத்திவிடுங்கள்" என்று இருந்தது. அவரது படைப்புகள் பிரசுரமாகாத பத்திரிகைகள் இல்லை. அவற்றின் ஒப்புநோக்குனர்களுக்கும், அச்சுக் கோப்பவர்களுக்கும் இவரது படைப்புகள் பீதியை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எழுத்தாளர் தனது மனதில் அந்த ளகரப் படத்தை நீண்டகாலமாகவே அகற்றவில்லை என்பது அண்மையிலும் நான் அறிந்தது.
எனது வகுப்பில் படித்தவர்களில் பெரும்பாலோர் லகர, ளகரப் பிரச்சனைகளில் குறைவாகவே மாட்டுப்படுவர. என்று நான் உறுதியாக நம்புகிறேன். காரணம் அவர்களுக்குப் படம் பிடித்துக் கொடுத்தவர், கதிரேசர். வாசிக்கும்போது 'உதிலை என்ன இருக்கு ழானாவோ, ளானாவோ" என்று வாத்தியார் கேட்கும்போது, அவரது குறும்பிரம்பால் வாயைப்பயம் வாங்க நேரிடும், என்று மாணவர்கள் தமது படத்தைத் திருப்பிப் பிடித்திருப்பர் என்பது நம்பிக்கை. கதிரேசர் என்று மாணவர்களால் அழைக்கப்படும் ஆசிரியர் திரு செ.கதிரேசர்பிள்ளையின் சிறப்புகளில் அல்லது அவரது இயல்புகளில் ஒன்று, அவரது நீலஃபைலும், அதற்கே அளவாக இவட்டப்பட்ட பிரம்பும்தான் அவர் இரண்டையும் அளவறிந்துதான் பாவித்தவர். அவரது பிரம்பிடம் மாணவர்களுக்குப் பக்தி அதிகம். அது வெளியே தெரியாத நாட்கள் மாணவர்களுக்கு நிம்மதியான நாட்கள்தான். அது கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இருக்கும் ஆமி காம்ப் மாதிரி. எப்போது ஆமி வெளியில்வரும் என்று தெரியாது. கவனமாக இருத்தல் நல்லது. கதிரேசர்பிள்ளை அவர்கள் தனது வகுப்பில் தமிழ்தான் படிப்பித்தவர் என்றாலும் அது ஒரு அசாதரண வகுப்பறை என்றே கூறலாம். தமிழை அடிப்படையாகக் கொண்ட பல விடயங்கள் அந்த வகுப்பறைக்குள் வரும், போகும். ஒருநாள் நாடகம் (பாடத்திட்டத்தில் இல்லாவிட்டாலும்) வரும். இன்னொருநாள் அறியாத ஒரு கவிதையும் அதன் இரசனையும் வரும். இத்தனைக்கும் வகுப்பைக் கட்டியாளக்கூடிய ஓர் அசாதரண ஆளுமையுடைய குரல் அவருக்கு இருந்தது ஒரு அனுகூலம் எனலாம். அவருடைய வகுப்பில் 'சிலபஸ்" முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டெல்லாம் ஒருபோதும் வராது. அவர் அந்த பஸ்ஸையும் முடித்துவிட்டு வேறு பஸ்களிலும் மாணவர்களை ஏற்றித்திரிவார். இவை, இன்றைக்கும் அவரது மாணவர்கள் அவரை மறக்கமுடியாமல் இருக்க முக்கிய காரணங்கள் சில. அவரது வகுப்பறை ஒரு அமைதியான மண்டபம்போல் சில சமயங்களில் தோன்றும். சில சமயங்களில் அரசு கொலுவீற்றிருக்கும் மிடுக்கோடு தோன்றும். பிறிதோர் சந்தர்ப்பத்தில் காதல் ரசம் சொட்டும் சோலை போன்று தோன்றும். இந்த இரசாயண பௌதிக மாற்றங்களுக்கு அவரது நடிப்பாற்றலும், வகுப்பில் பல்வேறுபட்ட ரசனைகளைக் குவிக்கும் ஆளுமையும் காரணமாக இருந்தன. அவரது வகுப்பறைக்குள்ளால் புறப்பட்டு இன்று உலகின் பல பாகங்களிலும் தமிழ் வளர்க்கும் பலரை நான் அறிவேன். எந்தச் சந்தேகமும் இல்லாமல் அவர்களிடம் கதிரேசரின் ஆளுமை படிந்திருக்கிறது என அடித்துச் சொல்வேன். கண்டிப்பும், கண்டிப்பிற்குப் பின் ஒளிந்திருக்கும் கனிவும் அவரது இன்னொரு இயல்பு. ஒரு நாள் ஒரு மாணவன் கண்டிக்கப்பட்டால், அடுத்தநாள் அவனது பயம் வேறுவிதமாகக் குறைக்கப்படும். சகல மாணவர்கள் பற்றியும் அவர் சரியாகக் கணித்திருந்தார். யார் குழப்படி செய்வார்கள் எனத் தெரிந்து அவர்கள்மேல், தனது கண்ணாடியின் கீழான பார்வையை அனுப்பி ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிவிடுவார். பிறகு குழப்படியாவது. ஒவ்வொரு மாணவரையும், அவரது திறமையை அடையாளம் காட்டிப் பாராட்டுவதோடு மாத்திரம் அவர் நின்றுவிடுவதில்லை. வேறு வழிகளில் பாராட்டுத் தேடிவரும்படியும் செய்வார். ஒரு தடவை எனது கட்டுரைக் கொப்பியை வேறு வகுப்பு மாணவிகள் (அப்போது எனக்குப் புல்லரித்த விடயம்) இரவல் கேட்டபோதுதான் அவர் கட்டுரைகளைத் திருத்துவதற்காக மாத்திரம் கொப்பிகளைக் கொண்டு செல்வதில்லை எனத் புரிந்தது. எனது கட்டுரை ஒன்றை அவர்களின் வகுப்பில் வாசித்துக் காட்டி, இப்படித்தான் கட்டுரை எழுதவேண்டும் என்றாராம் அவர். ஆனால் ஒருபோதும் எனது கவிதையை இப்படித்தான் எழுதவேண்டும் என யாருக்கும் முன்னுதாரணமாகக் கொண்டு சென்று காட்டியதில்லை. ஏனெனில், ஏதோ ஒருவித அச்சம் காரணமாக அவரிடம் நான் எனது காதல் ரசம் சொட்டிய இளவயதுக் கவிதைகளைக் காட்டியதில்லை. அவரது நாடகங்கள் பல தொடர்ச்சியாக அகில இலங்கையிலும் முதல் இடத்தைப் பெற்றன. இதற்கக் காரணம் இருக்கிறது. அவரது நாடகப் பிரதிகள் இதிகாசங்களில், முக்கியமாக இராமாயணத்தில் மக்களால் அதிகம் அறியப்படாத பகுதிகளைச் சுவையாக நாடகமாக்கி, அரங்கில் தருபவை. அவரது நெறியாள்கையில் நானும் (பெண் வேடமுமிட்டு) நடித்திருக்கிறேன் என்பது பெருமை. அவரது நாடகங்களில் நடித்ததன் மூலமே அந்தப் பாடசாலைக் காலங்களில் தமது புகழ்க்கொடியை நாட்டியவர்கள் பலர் உள்ளனர். அப்படிப் புகழ்க் கொடி நாட்டாவிட்டாலும், பல கொடிகளின் நிழலில் நான் நின்றிருக்கிறேன் என்பது எனக்குத் திருப்தி தருவது.
அவரிடம் கல்வி கற்ற மாணவர்களிற் பலர் அவரது கவிதைகளை வாசித்ததில்லை. முக்கிய காரணம் வகுப்பறைகளில் ஒருபோதும் தனக்கு அவர் இலவச விளம்பரம் தேடாதது. இன்னொன்று இப்போதைய பல கவிஞர் பெருமான்களைப் போல அவரிடம் தற்பெருமையோ, கவிதையால் பிழைக்கும் புத்தியோ இல்லாதது. அவர் எவ்வளவு தூரம் கவிதைகளை எழுதினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் நிறையவே எழுதியிருக்கவேண்டும் என்பது மட்டும் எனது விருப்பம். அவரது 'மரங்கள் நாட்டுவோம்" என்ற இசைப் பாடலைக் கல்லூரியின் மாணவ மாணவியரின் குரலில் கேட்ட யாரும் அவரது கவியாற்றல் பற்றிச் சந்தேகம் கொள்ளார். அவர் தனது கவிதை ஆற்றலைக்கூடச் சரியாக நெறிப்படுத்தாமல், மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்திச் செயற்பட ஒருவராயும் இருந்திருக்கலாம். ஆனால் அவரது மொழிமீதான ஆளுமை இன்றை எந்தக் கவிஞருக்கும் இருக்குமா என்று தெரியவில்லை. அந்த வகையில் அவர் பல கவிதைகளை எழுதாமல் இருந்தது எங்கள் துரதிர்~;டம்தான். பிற்காலத்தில் அவரது பார்வை மங்கலாகிப், பிறகு ஒரேயடியாகப் போய்விட்டது. இந்த அவசர உலகில் நிகழும் அனர்த்தங்கள் பலவற்றைப் பார்க்க வேண்டாம் என இயற்கை அந்த வாய்ப்பை அவருக்கு அளித்ததோ என்னவோ, நம்பிக்கைகள் தகர்ந்துகொள்ள அடுத்த நாளைப் பற்றிய நிச்சயமின்மை மனதை உரத்து அரிக்க இன்னொரு தேசத்தில் நான் வாழ்க்கiயில் அவரது மரணம் பற்றிய செய்தி வந்தது. இன்றுவரை மரணத்திற்குத் தப்பிய மானுடர் இல்லை. அவர் விதிவிலக்காக இருக்கவில்லை. இளமையின் நாட்களை இரைமீட்கையில் மனதுக்குள் புகைபோல எழுந்துவரும் துயரம் எனது மனதை மூடிவிட்டது. கண்களையும் கூட, வாயையும் கூட, என்னால் எதுவும் பேச முடியவில்லை. எனது மொழியின் மீதான் ஆளுமையிலேயே பெரும்பாலும் உணர்கிறவன் நான். மொழி என்கிற ஞானப் பாலை ஊற்றிய தாயை நான் இழந்தேன். துருவங்கள் சந்திக்கிற மாதிரித்தான் ஈழத்தமிழர்களின் வாழ்வும் நட்பும் ஆகிவிட்டது. எவரை எப்போது காண்போம் என்பது தெரியாது. எவரையாவது காண்போமா என்பதும் தெரியாது. ஒன்று நிச்சயம், பலரது தமிழறிவுக்குக் காரணமான கதிரேசரை இனிக் காணமாட்டோம். அவரைப் போன்ற இன்னொருவரையும் வாழ்நாளில் காணமுடியாது போகலாம்.
தூங்காத கண்கள்...

தொலைபேசி வாழ்க்கை என்னுடன் இரண்டறக்கலந்து நீண்டகாலமாகிவிட்டது. இப்போ அது இல்லாமல் நான் இல்லை. என்னால் முடியாது. ஆனாலும் வீட்டில் பலவேலைகளை நாங்களே செய்து முடிக்கவேண்டும். அப்படியொரு தீவிரமான வேiலைப்பொழுது ஒன்றில்தான் அவர் போன் செய்தார்.
வணக்கம்.வணக்கம். நான் ஒரு மகாஜனாவின் பழையமாணவர்.என்ற மறுமுனைக் குரலைக்கேட்டதும்; உசாராகிய என்னை அவரது சுய அறிமுகம் மேலும் உசாராக்கியது.
என்ன வேலை. சரி. நாளைக்கும் தொடரலாம் தானே!. மனசு இரங்க தொடர்ந்தேன்.
என்னுடைய பெயர் மகாதேவன். இடம் குரும்பசிட்டி. 63 வாக்கில் மகாஜனாவில் பயின்றேன். மகாஜனா பழையமாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை உபதலைவராக இருக்கிறேன். இன்றுதான் பிரான்சுக்கு வந்தேன். இரண்டுநாட்கள் மட்டும் பிரான்சில் தங்கமுடியும் என்றார்.
அறுபத்திமூன்று காலப்பகுதிஎன்றால், எனது வாய்க்குள் அரையும்குறையுமாக விரல் ஊசலாடிக்கொண்டிருந்த காலம். சின்னக் கழிசானோடு பள்ளிக்கூடமே நினைக்காத பருவம். சரி போகட்டும்.
உங்கட காலத்தில நான் அங்க யில்லை. அதிபர் ஜெயரத்தினம் பாடசாலையை விட்டு விலகியபோதுதான் நான் வந்தேன் என்றேன்.நீங்கள் குரும்பசிட்டி என்றா..ல்........., என்னுடன் குரும்பசிட்டி நண்பர்கள் சிலர் படித்தார்கள் ...சிலவேளை உங்களுக்கு என்று நான் இழுக்க யார்... யார் என்ற என்றார் ஆர்வம் பொங்க.
என் நினைவில் வந்தவர்கள்... வாமதேவன், மனோகரன். இன்னனுமாருவர் மகேஸ்வரன்.மகேஸ்வரனோடு இன்னுமொரு மறக்கமுடியாத சம்பவமும் மீண்டெழுந்தது. மகேஸ்வரனுக்கு ஒரு அண்ணை இருந்தவர். பெயர் நினைவில்லை. நல்ல மனிதர். கெட்டிக்காரர். அவருக்கு யாரோ வேண்டத்தகாவர்கள் முகத்தில் அசிட் அடித்தவர்கள். என்று நான் சொல்லச் சொல்ல அவர் ம் கொட்டிக்கொண்டிருந்தார்.அந்த அசிட் அடித்த சம்பவம் எனக்குள் மறக்கமுடியாத பதிவு. இப்போது நினைத்தாலும் மனசு ஜில்லிடுகிறது என்று நான் வேதனையைக்கொட்ட ம் கொட்டிக்கொண்டிருந்த திரு. மகாதேவன் அந்த அண்ணன் நான் தான் என்றார்.
நான் விறைத்துப்போனேன். எனக்கு வார்த்தைகள் வரவில்லை. சில கணங்கள் தடுமாறினேன்.ஒருமாதிரி என்னைச் சுதாகரித்துக்கொண்டு தொடர்ந்தேன்.இளவயதில் என்னுள் பதிந்த கோரம் இன்னும் ஆழமாக இன்மொரு நிகழ்ச்சியும் காரணம்.ஏறக்குறைய பத்து வருடங்கள் இருக்கலாம். பிரான்ஸிலருந்து வானொலி நிகழ்ச்சிஒன்று ஒலிபரப்பாகின்றது. அதில்; கனடா வானொலி நிகழச்சியொன்று. இதில் கலந்து கொண்ட கட்டுவன் நேயர் ஒருவர் - பெயர் நினைவில்லை - உங்களுக்கு நடந்த அந்தச்ம்பவத்தை நீனைவு மீட்டிக்கொண்டிருந்தார். எனக்கு மகேஸ்வரன், பள்ளிக்ககூடவாழ்க்கை எல்லாமே மனத்திரையில் எழுந்துநின்றாடின.
விபத்துக்கள் எதிர்பாராமல் வருவை. ஆனால் இது விபத்தல்ல. பழிவாங்கவேண்டும் என்ற அரக்ககுணம்.சல்புரிக் அமிலம், ஐதரோக்குளோரிக் அமிலம் பற்றி நாங்கள் விழி பிதுங்க பிதுங்க விஞ்ஞான பாடத்திற்தில் கற்றுக்கொண்டிருந்தோம். இந்த அசிட்டைப்போய் மனிதரின் முகத்தில் வீசி அடித்தால்....! நினைக்கவே எங்களுக்க குரல்வளை நடுங்கியது. மகாதேவன் அண்ணருக்கு வீசிய அசிட் பக்கத்தில் நின்ற மரஞ்செடி கொடிகளையும் எரித்துப் பொசுக்;கியதாகவும்;, அவர் ஓட்டிவந்த ஸ்கூட்டர் கலர்மாறியமாதாகவும் பார்த்தவர்கள் சொல்லக்கேட்டு வெருண்டோம். மகேஸ்வரன் நீண்ட நாட்களாக பாடசாலைக்கு வரவில்லை. வைத்தியசாலையும் வீடுமாக மாறிமாறி அலைந்தததால் அவன் படிப்பும் தடைப்பட்டது.இதைநான் சொன்னபோது தொலைபேசியின் மறுமுனையில் அவர்குரல் தளுதளுத்ததை உணரமுடிந்தது.
நானும் உணர்ச்சிவசப்பட்டடேன்.
எங்களது தொலைபேசி இணைப்பு தவிர்க்கமுடியாமல் விட்டு விட்டுத் தொடர்ந்தது.திரு. மகாதேவன் தொடர்ந்தார்.பாடசாலைக்காலம் பற்றிய பசுமைகள் பலவற்றை இறக்கினார். தன்னுடைய மனைவியும் மகானாஜவில் தான் கல்விபயின்றவர் என்றும் தாங்கள் காதலித்தே கைப்பிடித்தோம் என்றும் சொன்னார்.
பிறகென்ன! பாடசாலைப் பசுமைபற்றி சொல்லவா வேண்டும்.!நான் ம் கொட்டிக்கொண்டிருநதேன்.தாங்கள் உயர்தரவகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோதுதான் மைதனத்திற்கு புல் பதித்;த கதையையும் சொன்னார். அதிபர் ஜெயரத்தினம்பற்றி கதைகள் பல பகிர்ந்தார்.
இரண்டு தினங்கள் மாறிமாறிக் கதைத்தும் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்ற ஏக்கம் என்னுள். பாரிஸிலிருந்து முந்நூறு கிலோ மீற்றர் தொலைவிலிருக்கிறேன். திரு. மகாதேவன் மறுநாளே ஜேர்மனி சென்று கொழும்பு திரும்பிவிட்டார். எனக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத வேதனை. திரும்ப திரும்ப அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.
கொழும்புவரை சுகமாக வந்து சேர்ந்ததாக சொன்னார். பயணம் மனதுக்கு இதமாக இருந்தது என்றார்.உங்களை நேரில் பார்க்கமுடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது என்றேன். எனக்கு வருத்தமில்லை என்றார். எனக்கு சீ என்ற போனது.
நின்று நிறுதிட்டமாகச்சொன்னார். தம்பி எனக்கு எல்லாம் ஒன்று தான். 1973ம் ஆண்டு யூலை 25ம் திகதி நடந்த அந்த அசிற் சம்பவத்தில் எனது இரண்டு கண்களும் பார்வையிழந்துவிட்டன...
ஐயோ என்று நெஞ்சுக்குள் குழறினேன்
மனைவியே எனக்கு கண்கள். முப்பது வருடங்கள். எவ்வளவற்றதை;தாங்கிவிட்டேன். நம்பிக்கையே வாழ்க்கை. என்ற போது அவரது குரலில் உறுதி தொனித்தது.உறுதிமிக்க மகாஜனன் ஒருவருடனான தொடர்பு தொற்றிக்கொண்டதில் நானும் பெருமைகொண்டேன்.நாம் படித்த பாடசாலை என்ற இழை எப்படி யெல்லாம் பற்றிப்படர்கிறது.மகாஜனத்தாயே உனக்கு எனது வாழ்த்து.
- நா. வரதன்.
ஒரு பாத்துப்பாடடா
எனது பாட்டா தம்பர்
- கனக்ஸ் -
நான் ஆனா, ஆவன்னா சொல்லியே ஒரு உயிரைச் சாக அடித்தேன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களோ தெரியாது. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும். அப்போ எனக்கு வயது மூன்று இருக்கலாம். எனது பாட்டாவிற்கு ஏறக்குறைய எண்பது வயது. முழுமையான விவசாயி. கடினமாக உழைத்தவர், திடகாத்திர உடம்பு, நல்ல உயரம், செம் பொன்மேனி பற்கள் மாத்திரம் காலம் செய்த கோலத்தால் விடை பெற்று விட, வாய் கொஞ்சம் பொக்கு வாயாக,கதையில் மெல்லிய மழலை. நரைத்த மயிரில் உதிர்ந்தது போக எஞ்சியது உச்சியில் கொட்டைப் பாக்கு அளவு சிறிய குடும்மியாக காட்சி தந்தது. ஒருகாலும் படுத்திடாத என் பாட்டாவிற்கு ஏதோ ஒரு நோய் வந்து படுக்கையில் கிடத்தியது. மானிப்பாய் வைத்தியசாலையில் வைத்தியம். “இனி உள்ளக நோயாளியாhய் வைத்திருப்பதில் ஒன்றும் ஆகப் போவதில்லை வீட்டுக்குக் கொண்டு போய் அவர் விருப்பியதைக் கொடுங்கள் நிம்மதியாகப் போகட்டும்” என டாக்டர்கள் ஆலோசனை கூற வீட்டுக்குக் கொண்டு வந்து நாட்களை எண்ணத் தொடங்கியது சுற்றம். அவரோ பந்த பாசத்தைத் துறப்பதாக இல்லை. ஒரு மயக்க நிலை , அவ்வளவு தான். ஊர் உலகம் வௌ;வேறு ஆலோசனை கூற எனது தந்தையார்; அவற்றினை நிறைவேற்றத் தவறவில்லை. முதலில் ‘தானம்’ கொடுக்கச் சொன்னார்கள். தானம் கொடுத்தால் ஐயர் மாட்டை வீட்டுப்படலைக்கு அப்பால் கொண்டு போக உயிரும் போய்விடும் என்றார்கள். வீட்டிலே உள்ளதில் கிழட்டு மாடு ஐயருக்குத் தானமாகப் போனது. ஐயரும் விகடராமன் குதிரை ஓட்டிய மாதிரி “ முன்னே மூன்று போர் பற்றி இழுக்க பின்னே இருந்து இரண்டு போர் தள்ள- எந்நேரம் வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை மாதம் போம் காத வழி” என்றாராம் காள மேகப் புலவர் எப்படியோ மாட்டினை ஓட்டிச் சென்றாh.; பாட்டாவோ நடப்பதை வேடிக்கை பார்த்த படி கிடந்தார்.” கிழவனுக்குச் சேடம் இழுக்குது, கோரோசனை பாலில் கரைத்துக் கொடுத்தால் தொண்டை திறந்து விடும் ஆவி போய் விடும்” என இன்னொரு ஆலோசனை. அதுவும் நிறைவேற்றப் பட்டது. உற்றார் உறவினர் எல்லோரும் வரிசையில் நின்று பக்தி சிரத்தையுடன் கரண்டியால் பாட்டாவின் பொக்கு வாயில் பாலை ஊற்றினார்கள். இங்கே, பிள்ளையாருக்கு ஊற்றினார்களே, அதே போல ஊற்றுவதெல்லாம் உள்ளே தங்கு தடையில்லாமல் போனது .ஆனால் உயிர் மாத்திரம் போகவில்லை. என் பாட்டாவின் வேட்டி மூலைகளில் எல்லாம் எப்பவும் காசு முடிச்சு இருக்கும். இதை அறிந்த ஊர்ப் பெரிசு ஒன்று “ எடே கிழவனுக்கு காசு ஆசை விடுகுதில்லையடா, காசைக் கரைத்து வாயிலை ஊற்றிப் போட்டுப் பாருங்கோடா என்ன நடக்குது எண்டு” என்றது.அதுவும் நடந்தது.பாட்டா” சிற்றம்பலமும் சிவலோகமும் வேண்டாம், வெற்றம்பலமே போதும்” என நீட்டிக் கிடந்தார். “ எங்களுக்கு வேறை வேலை இல்லையா.? வாருங்கோடா போவோம், கிழம் போற நேரம் போகட்டும”; என்று அலுப்படைந்த சுற்றத்தில் ஒரு பகுதி நீங்கியது. மற்றையது கிழவன் போற இடத்துக்காவது புண்ணியத்தோடு போகட்டும் என முறை வைத்து தேவாரம், திருவாசகம், திருப்பு என்று சொல்வார்கள். தொடர்ந்து ஓதத் தொடங்கியது. அப்பொழுது தான் இந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. பாட்டா திடீரெனக் கண்ணை முழித்து என்னைப் பார்த்தார். பாட்டாவுக்கு என்னில் நல்ல பிரியம்.” தம்பி இங்கே வாதா” என்றார். நான் பயந்தேன்.”பாட்டா கூப்பிடுகிறார் இல்லே, போவேன்” என என்னை எல்லொரும் கிட்டப் போகுமாறு சொன்னார்கள். நான் போனேன். என்னை தன் ஒளி மங்கிய கணகளால் உற்றுப் பார்த்தபடி “ ஒரு பாத்துப் படியதா தம்பி” என்றார். நான் பேந்தப்பேந்த முழித்தேன். எனக்கோ ஒரு பாட்டும் தெரியாது. "அம்மா மெத்தப் பசிக்கிறதோ” “ருவிங்கிள், ருவிங்கிள் லிற்றில் ஸ்ராறோ” சொல்லித்தர ஒருவரும் அப்போ இல்லை. “ கிழவன் கேக்குது இல்லை, ஒரு பாட்டைப் படியேன்ரா மோனை”, இது தேவாரம் பாடியவர்களின் வேண்டு கோள். இக்கட்டான நிலமை.யோசித்தேன். ஒரே வழி. ஆனா, ஆவன்னா என ராகமுடன்
-2-( கர்ணகடூரம்) இழுத்தேன். “ ஒரு நல்ல பாத்துப் படியதா தம்பி” என பாட்டா மீண்டும் கேட்டார். கிழவனுக்குக் கேக்கேல்லை எடா, காதுக்குள்ளே சொல்லு” என்றனர். நானும் பவ்வியமாக பாட்டாவின் காதுக்குள்ளே " அனா, ஆவன்னா” எனக் கத்தினேன். அவ்வளவுதான். “சீ, போ, மூ-----“ என்ற பாட்டாவின் வாய் மீண்டும் மூடவில்லை. “ஐயோ, தம்பர் அப்பா ( அது தான் அவரின் பெயர்) போய் விட்டாயோ என எல்லோரும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினர். பாட்டியோ ஒடி வந்து என்னைக் கட்டிப் பிடித்து “என தாலியை அறுத்து விட்டியே எடா” எனக் கதறத் தெடங்கினார். உடனே சுற்றியிருந்த பெரிசுகள் எல்லம் என்னைக் கட்டிப் பிடித்து ஓலமிடத் தொடங்கின. என் நல்ல காலம் அம்மா இடையே புகுந்து” விடுங்கோடி என்ரை பிள்ளையை “ என என்னை இழுத்து எடுக்காவிட்டால் இன்றைக்கு இதனை நீங்கள் வாசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்க மாட்டாது. “போகுது இல்லை, போகுது இல்லைக் கிழம”; என்று சொல்லிக் கொண்டிருந்த பந்துக்களுக்குப் பாசம் எப்படித்தான் பொது;துக் கொண்டு வந்ததோ, ஆறாகப் பெருகியது கண்ணீர், முந்தானை மூக்கைச் சீற உதவியது, நான்கைந்து நாட்களாக ஆயத்தம் செய்த முகாரி ராகக் கீர்த்தனைகள் ஆரோகண அவரோகணங்களுடன் சீராய் புறப்பட்டன.
எது எப்படி என்றாலும் அன்றைக்குத் தொடக்கம் உள்@ர் சமூகத்திலே என் கௌரவம் சற்று ஏறு முகமாகவே அமைய ஆரம்பித்து விட்டது. ஓழுங்கையிலே என்னைத் தட்டித் தவறி முதியவர் எவராவது கண்டால் அவசர அவசரமாக மறுபக்கம் பார்த்துக் கொண்டு போவதைக் காண முடிந்தது. போதாக் குறைக்கு நான் படிப்பதற்காகப் பாடசாலை போன அன்றும் பனம் பழம் விழக் காகம் இருந்தது போல அசம்பாவிதம் ஒன்றும் நடந்தது. எங்கள் பக்கத்து வீட்டிலே தான் நாகலிங்க உபாத்தியாயர் வசித்து வந்தார். எங்களுக்கு நெருங்கிய உறவு. ஓய்வு பெறுகின்ற வயது. சிறாப்பர் பள்ளிக் கூடம் தான் எமது ஆரம்பப் பாடசாலை. நாகலிங்க உபாத்தியாயர் அங்கே ஆசிரியர். ஆசிரியர்கள் ஏணிகளாக இருப்பார்கள் என்றும் மாணவர் அதன் மூலம் ஏறி மேலே மேலே போவார்கள் என்றும் சொல்வார்களே, நாகலிங்கம் உபாத்தியாயர் அந்த ஏணியின் அடிப் படியாகவே என்றும் இருப்பவர்.சும்மா சொல்லப்படாது, முப்பது வருடங்களாக வீடு, அரிவரி வகுப்பு என்று வாழ்ந்த மனுசன். பள்ளிக் கூடத்துக்கு என்னை நாகலிங்க உபாத்தியாயர் தான் கூட்டிச் சென்று தன் வகுப்பிலே முதல் ஆசனத்தில் இருத்தினார். பள்ளிக் கூடம் ஆரம்பமானது. வாத்தியார் கரும் பலகையிலே “ அ” எழுதி விட்டு இது என்ன எழுத்து எனக் கேட்டார். எனக்கு ஆனாஇ ஆவன்னா நல்லாகத் தெரியும் தானே. நான் உடனே “ஆனா” எனக் கத்தினேன்.என் தலை விதி. உபாத்தியாயார்,”இக், இக்” என்றார். நெஞ்சைப் பிடித்த படி கீழே விழுந்தார்.அவரின் கதையும் முடிந்தது.அண்ணலும் நோக்க அவளும் நோக்கபாட்டிதான் எனக்கு உணவு ஊட்டுவது வழக்கம்.மற்றைய பாட்டிமார்களில் இருந்து என் பாட்டி வித்தியாசமானவர். மற்றவர்கள் இராமனைப் பற்றியும் அருச்சுனனைப் பற்றியும் கதை சொல்வார்கள். என் பாட்டிக்கோ இராமனும் பாட்டா தான், அருச்சுனனும் பாட்டா தான்.பாட்டி கன்னியாயிருந்த போது பாட்டா ஆணழகன். வெற்றுடம்புடன் உழவுக்கு இரண்டு வெள்ளை வெளேரென்ற வடக்கன் எருதுகள், நெடிய கொம்புகளுடன் முன்னே செல்ல தோழில் கலப்பையுடன் காம்பீரமாகப் பாட்டா பின்னே செல்வது மிதிலை வீதியிலே இராமன் வில்லோடு சென்ற காட்சிதான், பாட்டி வேலியை விலக்கிப் பார்த்துப் பரவசமாகி, “தோள் கண்டார் தோளே கண்டாருடன்” பாட்டாவின் தொடைக்கு மேல் வேட்டி நின்றதால் கமலத்தன்ன கால்களையும கண்டு சொக்கி நின்றது ஒரு நாளல்ல ஒரு சில நாட்கள். அண்ணலும் நோக்க அவளும் நோக்க,.கொல்லைக்குப் போன பாட்டியின் அப்பனும் நோக்க பாட்டி மிதிலையை விட்டு அயோத்தி வாசியானாள். வேலிக்கு மேலாலே இன்னும் கொஞ்சக் காலம் பார்க்க விடாமல் சட்டுப் புட்டு எனக் கல்யாணத்தை நடத்தி விட்டார்களே என பாட்டிக்கு மாத்திரம் சற்றுக் கவலை.
பாட்டா கடினமான உழைப்பாளி என்றேன் பாட்டி அதைச் சற்று வித்தியாசமாய” எடே அந்த மனுசன்ரை கோவணத்தக்குள்ளே சாமி முளைச்சதடா” என்ற கூறுவா. எனக்கு என்னவோ ‘முருகன் சாமியையும் பிள்ளையாhர் சாமியையும்’ மாத்திரம் தான் எனது -3-அம்மா அறிமுகப் படுத்தியிருந்தா. இதென்னடா புதுச் சாமி எனப் பாட்டியிடம் கேட்டேன். “அட மடச் சாம்பிராணி, பாட்டா வேர்க்க வேர்க்க வேலை செய்வதாலே மண்ணும், வேர்iவுயம் சாமி விதையும் அங்கே சங்கமம் ஆகி விட்டன” என்பார். நீண்ட காலத்துக்குப் பின்னர் தான் பாட்டியின் ஹாஸ்ய உணர்வு புரிந்தது.பாட்டாவின் வைத்தியம்அந்தக் காலத்திலே வயல்களிலே உழுவதற்கும், சூத்திரக் கிணறு இறைப்பதற்கும் எருது மாடுகளையே பாவிப்பார்கள். அவை இரண்டு வகைப் படும். நமது நாட்டு உள்@ர் மாடுகளை ‘ வன்னி மாடுகள்’ என்பார்கள்.மற்றைய வகை ‘வடக்கன் மாடுகள்’ இவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டவை. வெள்ளை நிறத்திலே, ஆறு அடிக்கும் மேலான உயரத்துடன், நீண்டு வளர்ந்த கொம்புகளுடன், உயர்நத் ஏரியோடு, மினு மினு என்ற உடலுடன் மிக்க காம்பீரமாக குதிரைகள் போன்று காணப் படும். பாட்டாவுக்கு மிருக வைத்தியமும் கொஞ்சம் கை வந்த கலை. ஆனால் என்றுமே அதற்காக ஊதியம் பெற மாட்டார். காசு வாங்கினால் சித்தியாகாது என்பது அவர் சித்தாந்தம். சில நிகழ்ச்சிகள் சொல்ல வேண்டும். ஊரிலே ஒருவருடைய எருது மாடு ஒன்று விழுந்து அதன் தொடை மூட்டு விலகி விட்டது. மாடு படுத்த படுக்கைதான் எவ்வளவு முயற்சித்தும் மாட்டினை எழுந்து நிற்கப் பண்ண முடியவில்லை. பாட்டாவை அழைத்துக் கொண்டு போய்க் காட்டினார்கள். பாட்டா உடனே இரு வடக்கயிறும் பத்துத் திடகாத்திரமான ஆண்களையும் கொண்டு வருமாறு கோட்டார். வந்ததும் மாட்டின் வயிற்றினைச் சுற்றி ஒருகயிற்றாலும், பாதித்த காலில் ஓரு கயிறையும் கட்டினார். வயிறில் கட்டிய கயிறை ஒருபகுதியனர் இறுகப் பிடிக்க காலில் கட்டிய கயிறை மறுபகுதியினரை முதலில் இழுத்து பின் மெல்ல மெல்ல விடச் சொன்னார். மாடோ கத்து கத்தென்று கத்தியது. சிறிது நேரத்தின் பின் பாட்டா “எல்லாம் சரி இனி மாடு எழுந்து திரியும்” எனக் கூறி விட்டுப் போனார். ஆனால் இரண்டு நாட்களின் பின்பு மாட்டுக் காரர் மீண்டும் வந்தார். மாடு இன்னும் அதே இடத்தில், அதே நிலையில் இருப்பதாகச் சத்தியம் செய்தார். பாட்டாவின் சய கௌரவம் பாதிக்கப் பட்டது. எங்கே பார்ப்போம், வா வீட்டுக்கு என உடனேயே அங்கு சென்றார். பாட்டா மாட்டுக்குக் கிட்டேபோனதை மாடு கண்டது தான் தாமதம், ஒரு மாயம் நிழந்தது. அந்த இடம் வெற்றிடமானது. மாட்டைக் காணவில்லை. அஸ்வமேத யாகக் குதிரை என்பார்களே. அது மூவுலகுக்கும் போய்விடுமாம். மாடு எப்படி எழுந்ததோ, எங்கே போனதோ யார் அறிவார். மாட்டுக் காரர் மாட்டினைத் தேடிக் கண்டு பிடித்து கெஞ்சிக் கூத்தாடி அதனை மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வர மூன்று நாட்கள் எடுத்ததாம்.
“ அக்குபங்சர்” என்று சீன மருத்துவ முறை ஒன்று உள்ளதே. ஊசியால் குது;துகிறார்களே. அது நம் நாட்டிலேயிருந்துதான் அங்கு போயிருக்க வேண்டும் என எண்ணுகிறேன். பாட்டா இதனைச் சற்று வித்தியாசமான முறையிலே மாடுகளுக்குச் செய்வாராம். மாடுகளுக்கு “முன்னடைப்பன்” என ஒரு வருத்தம் வருவதுண்டாம். அப்போ மூச்சு விட முடியாமல் பல மாடுகள் இறந்து விடுவது உண்டாம். பாட்டா வின் வைத்தியம் இந்த நோய் தீர்ப்பதற்குக் கண்கண்ட ஒளசதம். ‘இயங்கு’ என ஒரு மரம் உண்டு அதன் கிளைகளில் எல்லாம் நிறைய முட்கள். இம் முட்கள் மிகச் சுலபமாகத் தண்டில் இருந்து பிரியக் கூடியவை. இயங்கு மரத்தின் கிளை ஒன்றினை வெட்டி நோயுற்ற மாட்டின் மூஞ்சியல் பாட்டா வேகமாக அடித்து விடுவார். முட்கள் அதிகம் மாட்டின் மூஞ்சியல் குத்திய படி நிற்கும். மாடு தும்மச் சளி வெளியேறும். சிறிது நேரத்தின் பின்னர் மாட்டின் முகத்தில் உள்ள முட்களை எடுத்து விடுவார்கள். இப்படியாக தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்தால் ஒன்றில் நோய் இருந்த இடம் தெரியாமல் போகும் அல்லது மாடு இருந்த இடம் காலியாகும்.
ஆடுமாடுகள் கன்றோ, குட்டியோ ஈனுவதற்குச் சில சமயங்களிலே க~;டப்படுவதுண்டு. உடலில் ஒரு பகுதி வந்துடன் நின்றுவிடுவதோ அல்லது முற்றாகவே ஈனுவதற்குக் க~;டப்பட்டோ உள்ள நிலையிலே பாட்டாவைத் தேடி வருவார்கள் ஊரார்கள். குட்டி அரைகுறையாக வெளியே நீட்டியபடி இருந்தால் பாட்டா ஒரு மகப்பேறு மருத்துவரின் இலாவகத்துடன் கையினை உள்ளே புகுத்திக் கன்றுடன் வெளியே வருவார். கன்று வெளியே தெரியாவிட்டால் பாட்டா, காட்டில் -4-வளரும் தாவரக் கொடி ஒன்று வைத்திருக்கிறார் அக் கொடியினை வாயடியில் வைத்து ஏதோ ஓதுவார் பினர் மூன்றுமுறை காறித் துப்பி விட்டு அக்கொடியினால் ஆட்டினதோ, மாட்டினதே வயிற்றினைச் சுற்றி இறுக்கக் கட்டிவிட்டுப் போய்விடுவார.; சிறது நேரத்தில் சுகப் பிரசவம் நடக்கும்.என்ன ஓதினார் என்பது இறுதிவரை மர்மமாவே இருந்தது. இந்த வைத்தியங்கள் எல்லாம் ஆண்தலை முறையாகவே செல்ல வேண்டும் என்பதில் பாட்டா மிகத் தீவிரமாக இருந்தவர். எனவே பாட்டியை இவ்விசயங்களில் சற்று எட்டவேதான் வைத்திருந்தார். இந்த சேவைகளுக்குப் பாட்டா எந்த விதமான ஊதியமும் பெறுவதில்லை எனக் கூறினேன். ஆனால் இதற்குப் பரதி உபகாரம் ஒன்று நடைபெறவதுண்டு.கன்று ஈன்றதும் மதலில் கன்றினை பால் ஊட்டவிடாமல் அப்பாலினைக் கநற்து விடுவார்கள். இப்பாலினைக் கடும்பு என்பாரகள். அதனைக் காச்சினால் வெண்கட்டிபோன்று வரும். மிகச் சுவையானதாக இருக்குமாம்.பாட்டாவிற்கு ஒரு பகுதியை அனுப்பி வைப்பார்களாம்.
இவை எல்லாம் பாட்டி நாளாந்தம் உணவூட்டும் போது சொன்ன தகவல்கள். புழுகு என நீங்கள் நினைத்தீர்களானால் அது பாட்டியின் கற்பனைத் திறத்திற்குப் பாராட்டு.
மகாஜனன் இணையத்தளம்மேலும் மெருகேற நிறைந்த மனிதவலு தேவைப்படுகிறது. புகலிடச்சூழலிலின் இயந்திரப்பொறிக்குள்;, பொதுவாழ்வுக்கு ஒவ்வெருவரும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே நேரத்தை ஒதுக்கமுடியும். அதிலும் நேரங்களை சிக்கனமாக்க, தேவைக்கேற்ற இடத்தில் மட்டும் பாவிக்கத்தெரிந்தவர்களால் மட்டுமே அதிகம் செயலாற்றமுடியும். செய்யவேண்டிய வேலைகள் குவிந்து கிடக்கின்றன.... மகாஜனன் இணையத்தளமும் தனதுநோக்கில் ஒரு சிறுபடிமட்டுமே முன்னேறியிருக்கிறது..இதனை மேலும் மெருகேற்ற அக்கறையுள்ளவர்கள், நேரத்தை செலவுசெய்ய தயாராகவுள்ளோர் எம்முடன்தொடர்புகொள்ளவும்..ஊர்கூடித் தேர் இழுப்போம் வாரீர்;;!!!
- மகாஜனன்

jeudi 23 août 2007

மகாஜனன் இணையத்தளம் அன்புடன் உங்களை வரவேற்கின்றது.
மகாஜனர் தமக்குள் ஒரு பிணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளல் அதனை வலுப்படுப்டுத்திக்கொள்ளல் அதன்மூலம் பயனுள்ள சில நற்கருமங்களைஆற்றமுற்படல் என்னும் நோக்கோடுஇவ் இணையத்தளம் ஆரம்பிக்கப்படுகிறது.
இத்தளத்தினுடாக மகாஜனர்களை இலகுவாக ஒன்றிணைக்க முடியும் என நம்புகிறோம்
தெல்லிப்பழையிலுள்ள மகாஜனாவின் வராற்றினை முடிந்தளவு பதிவாக்க முயற்சிப்போம்.
உலகெங்கிலுமுள்ள மகாஜன பழையமாணவரது செயற்பாடுகளை எல்லோருமறியச்செய்தல். அதன்மூலம் மகாஜனர்களை உற்சாகப்படுத்தல்.
மகாஜன படைப்பாளிகளை இனங்கண்டு ஊக்குவித்தல்.அவர்களது படைப்புக்களைப் பதிவாக்குதல்.
என தொடரும் எங்கள் முயற்சிக்கு உங்கள் ஆதரவினையும் நட்போடு எதிர்பார்க்கிறோம்.நன்றி
மகாஜனன்பாரிஸ் 14.04.2006
www.mahajanan.com

mercredi 22 août 2007